ஞாயிறு, 4 ஜனவரி, 2026

பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…!

 பரங்கிப்பேட்டை  தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…!



பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-2026 தேர்தல் நடைபெற்று வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது 

இதற்கு முன்பு நடைபெற்ற  மூன்று தேர்தலும் பரங்கிப்பேட்டையை  சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரி தலைமையில் தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டு தேர்தல் நடந்தேரியது

முதல்முறையாக பரங்கிப்பேட்டையில் இருக்கும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் ஒருங்கிணைக்கப்பட்டு அவர்களில் ஏழு பேர் தேர்தல் கமிட்டியாக செயல்பட இத்தேர்தல் முன்னெடுக்கப்பட்டது.




தேர்தல் கமிட்டி


1. A. மெய்தீன் அப்துல் காதர் (பசுமை ஹாஜி) - தேர்தல் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்

2. S. குலாம் முஹம்மது கவுஸ்

3. N. A. முஹம்மது இல்யாஸ்

4. S. முஹம்மது அலிகான்

5. M. G. M. ஆகிஷா மாலிமார்

6. H. அப்துஸ்ஸமத் ரஷாதி

7. K. அன்வர் ஹசன்


21ம் நூற்றாண்டின் முதலாம் காலாண்டில் நடைபெறும் இத்தேர்தலை  காலத்திற்கேற்ப மெருகேற்றி நவீன  தேர்தல் நடைமுறைகளை  தன்னார்வலர்களின் பங்களிப்புடன் தேர்தல் கமிட்டியினர் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.



1) ஜமாத் தேர்தலில் வாக்களிப்பவர்கள் குறித்த தனி Database உருவாக்கி அதை வாக்காளர்கள் ஆன்லைனில் சரிபார்த்துக் கொள்ளும்படி அறிவித்தனர். இந்த டேட்டா பேஸ் உருவாக்கப்பட்டதன் மூலம் இன்னும் பல நன்மைகள் எதிர்காலத்தில் நம் சமுதாயத்திற்கு கிடைக்கும்.

2) ஜமாத் தேர்தலுக்கான தனி வெப் லிங்க் உருவாக்கப்பட்டு வாக்கு நிலவரங்களை வெளிநாட்டில் இருப்பவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் அருமையான ஏற்பாடு செய்திருந்தனர்.

3) இந்த தேர்தலில் வாக்கு செலுத்த வரும் ஒவ்வொருவரின் அடையாள ஆவணமும் Database உடன் verify செய்யப்பட்டு QR CODE உருவாக்கப்பட்டு அதன் பின்னரே வாக்களிக்கும் நடைமுறையை வெற்றிகரமாக தேர்தல் கமிட்டியினர் செயல்படுத்தி உள்ளனர்.


இத்தகைய நவீன முறைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும் வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை NRI களுக்கு வாக்குரிமை அளிக்கப்படாதது குறித்து NRI கள் வருத்தம் அடைந்ததாக தெரிகிறது

புதன், 14 மே, 2025

'உம்மா.. நான் பாஸாயிட்டேன்'!

மே மாத வெயில், வியர்வை பிழிந்து எடுத்தாலும், அதைவிட அம்மாதத்தில் அன்றைய ஒருநாள் பரீட்சை ரிசல்டை பார்க்கும் வரை, வயிற்றில் புளியை கரைப்பதும், மனதில் கிலி'யை ஏற்படுத்துமே பெரிய விடயமாக இருக்கும். (என் போன்ற ஆவ்ரேஜ் மாணவர்களுக்கு)

அதற்கு முன்பு..

அன்று ஒருநாள் ஏப்ரல் மாதத்தில்  தேர்வு எழுத ஒரு காலையில் எழுந்து தயாராக வேண்டும்.

காலை 9 மணிக்கே பள்ளிக்கு  போய்விடு என்று வீட்டில் கூறும் போது அந்த ஹால் டிக்கெட் எங்கே வச்சேன் என அப்போதுதான் தேட நினைவு வரும். அதையும்  மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் தேடுவோம் தெரிந்தால் அதற்கு தனி திட்டு.

தேடிய 'பேஹாலில்', ஹால் டிக்கெட் கிடைத்ததும், நடு ஹாலில் சாப்பிட அமர்ந்தால் ஒரு தோசை போதும் அல்லது 2 இட்லி போதும் என்று பரீட்சை எழுதும் போது தூங்கவா? .

இல்லைன்னா இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு போ மதியானம் வந்து சாப்பிடலாம் என்று துரத்தி விடுவார்கள். 

"தடை செய்யப்பட்ட பகுதி" அறிவிப்பு பலகையைத் தாண்டி, அணிவகுத்து சென்று, ஆழ்ந்த அமைதியாக இருக்கும் வகுப்பு அறைகளையும் தாண்டி சென்று அனுமதிக்கப்பட்ட தேர்வு அறையில் அமர்ந்து படித்ததெல்லாம் வர வேண்டும் என்று மனம் நினைக்கும், லைட்டாக உதறலும் எடுக்கும். 

இன்னும் ஸ்குவாட் (Squad) வருகிறார்கள் என்றால்..(?) அவர்களை காணும் போது பிட் அடிக்காமலே 'ஹா(ர்)ட்பிட்' வேகமாக துடிக்கும்.

ஸ்குவாட் குழு எடுத்துக் கொண்டு வரும் மஹேந்திரா ஜீப்பின் டிரக் இஞ்சினிலிருந்து வரும் சப்தம் பழைய போலீஸ் படங்களை நியாபகப்படுத்தும்.

இப்படியே அனைத்து தேர்வுகளும் முடிந்து, மனம் சகஜமாகி விளையாட்டு மனநிலைக்கு  திரும்பும் நேரம் "பரீட்சை நல்ல எழுதியிருக்கீயா பாஸ் ஆகிவிடுவல்ல..? அடுத்து என்ன படிக்க போறே?" என்கிற பக்கத்து விட்டுக்காரரின் விசாரிப்பு மனதை  பக்,பக் என்று பதபதைக்க வைக்கும்.

பத்தாவது நன்றாக படிக்கும் மாணவர் என்றால் +1 படிக்கப்போகிறேன்.

நன்றாக படிக்கும்

+2 மாணவர் என்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ்..

படிக்கவே வராத மாணவர்கள் வெறுப்பாகி, (அன்று நடப்பில் இல்லாத ஐ.டி (IT) படிக்க போகிறேன் என்று கூறவா போகிறார்கள்?) பத்தாவது என்றால் ஐ டி ஐ.  +2 என்றால் பாலிடெக்னிக், அதுவுமில்லேன்னா நெக்ஸ்ட் அட்டெம்ட் தான் என்று கூறுவார்கள்.

'அதானே ஒலக வழக்கம்'

படிப்பில் சுமாரான மாணவர்களுக்கு  அன்றைய சுவர் விளமபரம் ஆறுதலாக அந்த டிசைனில் இருக்கும் 

 10th Pass/Fail கவலை வேண்டாம் சேருங்கள் ம......மி ஐ.டி.ஐ.

*பிட்டர்

*எலக்ட்ரிசியன்

வருங்காலத்தில் சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!

(தற்போதைய கேட்டரிங் விளம்பரம் போல..)

ஆமாம் அந்த ஐ.டி.ஐ.க்காரர் தான் கூடிய சீக்கிரத்தில் சிங்கப்பூர் 'எஸ்-பாஸ்' வாங்கி கொடுத்துடுவாப்லே என்று அவர்களின் பெற்றொர்கள் நக்கலடிப்பார்கள்.

இப்படியே 1வகுப்பு  முதல் 9 வகுப்பு வரை பரீட்சை முடிந்து விடுமுறை விட்டு பள்ளியை இழுத்தி சாத்தியதும், பத்தாவது, +2 படித்து முடித்தவர்களுக்கு அடுத்து என்ன படிக்கலாம் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும்.

அதனால் அவர்கள் டீக்கடை பேப்பரை பார்த்தும், பொது நூலகம் சென்று நாளிதழ் வாசித்தும் ஒரு முடிவுக்கு வருவார்கள்.

வனஜா தையல் பள்ளி முதல் கரும்பு இன்ஸ்பெக்டர் வரை அனைத்து விளம்பரமும் பத்திரிக்கையில் பக்கத்துக்கு பக்கம் வித்தியாசமாக குத்தகை எடுத்து இருக்கும்.

அடுத்து மாணவர்கள் என்ன படிக்கலாம்? மேற்படிப்பு படிக்க பள்ளி,கல்லூரிகள் எங்கு இருக்கிற  என தகவல் தருகிற

'மாணவர் மலர்'  என்பதெல்லாம் அப்போது பெரிய பிரபலமாகவில்லை.

கோடை விடுமுறையை 1முதல் 9 வகுப்பு வரை உள்ளவர்கள் மட்டும் ஆனந்தமாக அனுபவிக்கும் போது 10 வகுப்பு 12 வகுப்பு முடித்தவர்களை மட்டும் புலம்ப விட்டு,விடும்.

குறுக்கே வந்த கவுசிக்-காக 11 வகுப்பு மாணவர்களுக்கு அந்த விடுமுறை அனுபவிக்க எந்த தடையும் இருக்காது மேற்படிப்பு குறித்து ஒரு டென்சனும் இருக்காது.

மேல் நிலையிலேயே நாங்க ஒரு தினுசாக்கும் என்று அவர்களின் மனநிலை நினைக்க வைக்கும்.

'இருங்கடி அடுத்த வருசம் இருக்குது உங்களுக்கு' என்பது இவர்களின்(+2) மனநிலை..

அன்று எந்த  ஆர்ப்பாட்டம் என்பதே இல்லாமல் சென்னை வானொலி நிலையம் 'விவித் பாரதி' தமிழ்ச்சேவை 2 -விலும்,

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையமும் அக்கம் பக்கத்து வீட்டில் தேர்வுக்காக மாணவர்கள் படிப்பார்கள் அதனால் ரேடியோவில் வால்யூமை குறைத்து வைத்து அவர்களுக்கு உதவுங்கள்' என்று பொதுநலம் விரும்பியாக இருந்தது. 

மூச்சே விடாமல்,நிறுத்தி பேசும் பண்பே(பழக்கம்) இல்லாத இன்றைய பண்பலைகள் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்காக எங்ஙனம் பங்களிப்பை தருகிறது என்பது கேள்விக்குறி தான். 

அதில்லாமல் கூடுதலாக

சமூக வலைதளங்கள் பெருகி விட்ட காலத்தில், ஒவ்வொருவரின் கைகளில் பிடிக்கும் செல்பேசிகள், படிக்கும் மாணவர்களின் சிந்தனையை 'ரீல்ஸ்-ஷார்ட்ஸ்' மோகத்தில் சிதறியடிப்பதும் உண்மை! அதையும் மீறி மாணவ-மாணவிகள் வெற்றியைக் குவிக்கிறார்கள் என்பதும் உண்மை!

இப்படியே விடுமுறை நாட்கள் கழிந்து ரிசல்ட் தேதி அன்று மாலை பேருந்து நிலையத்திக் ஒரு குழுவும், சஞ்சீவிராயர் கோவில் முருகன் மெடிக்கல் அருகே உள்ள பங்க் கடையில் ஒரு குழுவும் கடலூரிலிருந்து வரும் பத்திரிக்கைக்காக காத்து நிற்கும்.

நீங்க எதுக்குங்க வைட்டிங்? ரிசல்ட் பார்க்கதான். அப்ப நீங்க ? நாங்களும் ரிசல்ட் பார்க்கதான். 

என்று பரஸ்பரம் விசாரிக்க.

ஆம்! இரண்டு குழுக்களும் ரிசல்ட் பார்ப்பவர்கள் தான்.

முதல் குழு வருடத்திற்கு  ஒருமுறை மட்டும் பார்க்கும் பத்தாவது +2 படிக்கும்  மாணவர்கள் குழு.

(ரிசல்ட் தேதியில் மாற்றமுண்டு)

இரண்டாவது குழு தினமும் அதிர்ஷ்டம் வந்துடுச்சா?! என்று அதிர்ஷ்டம் பேப்பரில் லாட்டிரிச்சீட்டு  ரிசல்ட் பார்க்கும் குழு.

காலை நாளிதழில் ஒரு நம்பர் சீப்பிட்டு போனால் ( தவறாக பிரிண்ட்  ஆனாலும்) கூட மாலை வரும் அதிர்ஷ்டம் நாளிதழ் கெஜெட் மாதிரி மாற்றவே முடியாது.

அதனால் கெஜட் வாங்கி தன் அதிர்ஷ்டத்தை பார்க்கும் அந்த குழு.

இரண்டு குழு(க்)களும் கண்கள் பனிக்க,கனவுகள் நனவாக அந்த மாலை பேப்பருக்காக காத்திருந்தனர்.

நடுவில் தம்பி பாஸாகி விடுவல்ல? என்று லாட்டிரி குழுவிலிருந்து ஒருவர் கேட்க..

பாஸாகி விடுவேன் ஏற்கனவே மனசு திக் திக் என்று இருக்கு நீங்க வேற ஆறுதலா ஏதாவது சொல்லுங்க..

பேசிக் கொண்டிருக்கையில் அந்த மாலை  நாளிதழ் பேருந்தில் வந்து இறங்கியது. அவரவர் முன்பதிவு செய்த முகவரிடம் தன் பத்திரிகையை வாங்கி ரிசல்ட் பார்த்தனர்.

அதில் கூடுதாலோனர் பாஸாகி இருந்தனர் என்பதை முகத்தில் வரும் மகிழ்ச்சியில் தெரிந்தது.

பாஸானவர்கள் நேராக பெரியக்கடையில் இருக்கும் ராமசந்திரா ஷாப், சஞ்சீவிராயர் கோவில் ஜெய்லானி ஸ்டோர் ஆகிய கடையில் நியுட்ரின், எக்லைர்ஸ், காராமில்க் சாக்லேட் மிட்டாய்களை வாங்கி பங்கிட்டு கொடுத்துக் கொண்டிருந்தனர்..

தம்பி நீங்க பாஸா? பேருந்து நிலையத்தில் காத்திருந்த அவரே மீண்டும்.

நான் பத்தாவது பாஸாயிட்டேன்.. நீங்க..

உங்க அதிர்ஷ்டம் என்னாச்சி?

பாக்கெட்டிலிருந்து கையை எடுத்து பத்து விரலை விரித்து (வடிவேல்  போல்) இல்லை என்று சைகை காட்டிவிட்டு சென்றார்.

அதிர்ஷ்டம்  உங்களை கோடீஸ்வர பாஸ் (BOSS) ஆக்காது, முயற்சியே உங்களை பாஸா(PASS)க்கும்.

(ரிசல்ட் பாத்த கையோடு பசங்களுக்கு சொல்லிட்டு, பேப்பரும் கையுமாக வூட்டுக்கு போயி "உம்மா நான் பாஸாயிட்டேன்" என சாக்லெட் கொடுத்து கொண்டாடுவதே தனி சந்தோஷம்தான்..)



-

ஊர் நேசன்

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி..!

தொலைக்காட்சிப் பெட்டிகளெல்லாம் வெகுஜன மக்களிடம் வந்து சேராத, அந்த நாட்களில் 'சம்மர் விடுமுறை' என்பது நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு அன்று ஒரு திருவிழா போல் தான் இருக்கும்.

பள்ளி இறுதி நாள் அன்று ஏற்படும் அலாதி இன்பம் மற்ற நாட்களில் கிடைக்கும் இன்பங்களை விட மேலானதாக தெரியும்.

கோடை விடுமுறையில் எந்தந்த வகையில் நேரத்தை விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஒவ்வொருவருக்கும் மனம் கற்பனைக் கணக்கீட்டுக்  கொண்டே இருக்கும்.

நூறு மில்லி மல்லாட்டை எண்ணெய், ஒரு கீதா சோப் வாங்கிட்டு வா என்று வீட்டில் கூறிய போது சூட்டில் போகாத கால்கள், கொதிக்கும் பொதி மண்ணில் காலணியை தாண்டி, தீமிதியாக சைக்கிள் டயர் வண்டி ஓட்டுவதற்கும் நுங்கு வண்டி விடுவதற்கும் என சாதாரணமான நிகழ்வாக கால்கள் ஓடி செல்லும். 


வெளியூரில் சொந்தம் இருப்பவர்களுக்கு  மட்டும் கோடை விடுமுறை வேற லெவலாக இருக்கும்,